என் மலர்
நீங்கள் தேடியது "you will get more income"
- ஆன்லைனில் தங்க வியாபார ஆசை காட்டி துணிகரம்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 24), கம்ப்யூட்டர் டிசைனர்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஷேர் மார்க்கெட் எனும் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ந்துள்ளார். அதில், தங்க வியாபாரம் குறித்து ஒருவர் பதிவிட்டு, தான் தங்கத்தில் செய்துள்ள முதலீட்டின் மூலம் பல லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவை படித்த மோகன் குமார் அந்த குரூப்பில் தானும் தங்க விற்பனையில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு மோகன் குமாரிடம் தங்க வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை மர்மநபர் கொடுத்த வங்கிக்கணக்கில் ஆன்லைனில் செலுத்தி உள்ளார். சிறிதுநேரத்தில் அந்த மர்மநபர், மோகன்குமாரிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்த தங்க வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பணம் திரும்ப வராது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒரு ரகசிய எண்ணை கொடுத்து இதன் மூலம் ஷேர்மார்க்கெட்டில் தனியாக கணக்கு தொடங்கி, அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். அதையடுத்து அவர் தனியாக கணக்கு தொடங்கி வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்தை அந்த வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அவருடைய ஷேர் மார்க்கெட் வங்கி கணக்கு திடீரென முடங்கியது. பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் ஷேர் மார்க்கெட் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் படி மோகன் குமாருக்கு குறுந்தகவல் வந்தது.
இதையடுத்து அந்த செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டு கேட்ட முயன்ற போது உடனடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த எண் வெளிநாட்டு எண் என்று தெரியவந்தது. அப்போதுதான் மர்ம நபர்கள் அவரை தங்க வியாபார ஆசை காட்டி ரூ.8 லட்சத்து 31 ஆயிரத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.
இது குறித்து மோகன் குமார் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






