search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Garment Trade"

    • கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    • தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.

     திருப்பூர்:

    இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) அமைந்தால் ஆயத்த ஆடைகள், ஜவுளித்துறை வர்த்தகம் மேம்படும் என்று பின்னலாடை துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-இங்கிலாந்து-இந்தியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்துக்குள் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் என்று மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் நிச்சயம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்காக இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், முக்கிய பிராண்டட் ஆடைகளை தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டனர். நிறுவனங்களின் ஆடை தயாரிப்பு திறன், வசதிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்து வைத்துள்ளது. தங்களுடைய தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து, நவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.விரிவாக்கம் செய்யப்பட்ட அளவுக்கு வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை என்றாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மிக குறைந்த அளவே வர்த்தகம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் திருப்பூரில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு 5 மாதங்களை ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அளவே குறைவு. இது பயப்படும்படியான நிகழ்வு இல்லை.கடந்த மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்தியா-இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினால் திருப்பூருக்கான ஆர்டர் அதிகரிக்கும். அதாவது விரிவாக்கம் செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் முழுவீச்சில் ஆடை உற்பத்தியில் ஈடுபட முடியும். அவ்வாறு நடக்கும்போது திருப்பூரில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்தநிலையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 'பிராண்ட் திருப்பூர்' என்ற இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். வளம்குன்றா வளர்ச்சி என்பது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் ஆடைகள் தயாரிப்பு ஆகும். இந்த தொழில்நுட்பத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து சாய ஆலைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் தினமும் 13 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அதில் 85 முதல் 90 சதவீதம் நீரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தண்ணீர் பயன்பாட்டை குறைத்துள்ளனர். சூரியஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலமாக திருப்பூர் தொழில் துறையினர் 2 ஆயிரத்து 500 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு 600 மெகாவாட் மின்சாரம் போதும். மீதம் உள்ள மின்சாரத்தை அரசுக்கு வழங்கி வருகிறார்கள்.திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது மழையின் அளவை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தனர். 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்துள்ளனர். ஐ.நா. சபையும் வளம்குன்றா வளர்ச்சியை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது. உலக வர்த்தகர்களும் அதையே விரும்புகிறார்கள்.இவை அனைத்தையும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே கடைபிடித்து செய்து வருவதால் 'பிராண்ட் திருப்பூர்' என்பதை உலக அளவில் தெரியப்படுத்தும் நடவடிக்கையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, சர்வதேச பின்னலாடை கண்காட்சி வருகிற 12-ந் தேதி திருப்பூரில் தொடங்க உள்ளது. உலக அளவில் வர்த்தகர்கள் இந்த கண்காட்சிக்கு வர இருக்கிறார்கள். வளம்குன்றா வளர்ச்சியை நோக்கி ஏற்கனவே நாம் பயணப்பட்டு வருகிறோம். இந்த கண்காட்சியின் மூலமாக 'பிராண்ட் திருப்பூர்' என்பதை தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் உலக அளவில் வர்த்தகம் செய்யும் தொழில்முறையை கையில் எடுத்துள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்.

    ×