என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Winter seson"

    காலப்போக்கில் கூலிங் ஷீட், தகர ஷீட் பயன்பாடு அதிகரிப்பால் தென்னந்தடுக்குகளுக்கான தேவை குறைந்தது.

    உடுமலை:

    உடுமலை அருகே ஜல்லிபட்டியில் தென்னை ஓலைகளில் இருந்து தடுக்கு பின்னும் தொழிலில் 30க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில் இருந்து ஓலைகளை விலைக்கு வாங்கி வந்து ஆலாங்குளம் மற்றும் தினைக்குளத்திலுள்ள தண்ணீரில் ஊற விடுகின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஓலைகளை எடுத்து தடுக்கு பின்னுகின்றனர்.

    முன்பு அனைத்து வகை பந்தல்களிலும், தென்னந்தடுக்குகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் கூலிங் ஷீட், தகர ஷீட் பயன்பாடு அதிகரிப்பால் தென்னந்தடுக்குகளுக்கான தேவை குறைந்தது. இருப்பினும் கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க தென்னந்தடுக்குகளால் அமைக்கப்படும் பந்தலே சிறந்ததாக உள்ளது.இப்பகுதியில் உற்பத்தியாகும் தடுக்குகள் கடலூர், திருச்சி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலுள்ள தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் ஓலைகள் நீளமாக இருப்பதால் தடுக்குகளும் தரமானதாக பின்ன முடியும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பனி சீசன் காரணமாக உற்பத்தி செய்த தடுக்குகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.

    இது குறித்து தென்னந்தடுக்கு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 300 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.

    வேலை இல்லாத நாட்களில் வருவாய் இல்லாமல் சிரமப்படுகிறோம். வரும் கோடை சீசனில் தடுக்குகளுக்கு தேவை அதிகரித்து, விலையும் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். தமிழக அரசு, தொழிலாளர் நல வாரியங்கள் வாயிலாக எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.  

    ×