search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild forest life"

    5 நாள் காட்டு வாழ்க்கை அனுபவம் தன்னம்பிக்கைக்கு உதவியதாக ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ வெளியிட்டுள்ள மலரும் நினைவுகளில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi
    மும்பை:

    பிரதமர் மோடியின் மலரும் நினைவுகளை 5 பாகங்களாக ‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

    இதுவரை 3 பாகங்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் சிறுவயதில் தந்தைக்கு உதவியாக டீக்கடையில் வேலை பார்த்ததாகவும், 2-வது பாகத்தில் 17 வயதிலேயே வாழ்க்கையின் மீதான தேடல் ஆரம்பித்து இமயமலைக்கு சென்று 2 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியதாகவும் கூறி இருந்தார்.

    3-ம் பாகத்தில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-

    இமயமலையில் இருந்து திரும்பிய குறுகிய காலத்தில் ஆமதாபாத்துக்கு சென்றேன். பெரிய நகரத்தில் தங்கியது அதுதான் முதல்முறை. அந்த வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. அங்குள்ள எனது உறவினரின் உணவகத்துக்கு சென்று உதவிகள் செய்வேன்.

    பிறகு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து முழு நேர பிரச்சாரகராக பணியாற்றினேன். அப்போதுதான் பல்வேறு தரப்பு மக்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

    ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை சுத்தம் செய்வது, டீ தயாரிப்பது, பாத்திரங்களை கழுவது போன்ற பணிகளை நாங்களே செய்வோம்.



    இருந்தாலும் இமயமலையில் கிடைத்த அமைதி கிடைக்கவில்லை. எனவே சில நாட்களாவது அமைதியான இடத்துக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 5 நாட்கள் வெளியில் சென்று விடுவேன். குறிப்பாக மக்கள் நடமாட்டம் இல்லாத சுத்தமான தண்ணீர் உள்ள காட்டுப்பகுதியில் தனியாக தங்கி இருப்பேன். அந்த 5 நாட்களுக்கும் தேவையான உணவு பொருட்களை கையில் எடுத்து சென்றுவிடுவேன். அங்கு வானொலி, செய்தித்தாள்கள் எதுவும் இருக்காது. அந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி, இணையதள வசதிகள் எல்லாம் கிடையாது.

    தனிமையில் இருக்கும்போது எனது வாழ்க்கையை சுய பரிசோதனை செய்ய முடிந்தது. அப்போது கிடைத்த பல அனுபவங்கள்தான் இப்போதும் உதவிகரமாக உள்ளன.

    எனவேதான் இன்றைய இளைஞர்கள் பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி வருகிறேன். அப்போதுதான் உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளவும், உங்களை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவும் முடியும்.

    தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது.

    வெளிச்சத்தை வெளியில் தேடாதீர்கள். அது உங்களுக்குள்தான் இருக்கிறது. எனவே நீங்கள் தான் சிறந்தவர் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். #PMModi


    ×