search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water in Bhavani River"

    • அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    மொத்த கொள்ளளவான 100 அடியில் நேற்று காலை 81 அடி நீர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு 97 அடியை எட்டியது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீரின் அளவான 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே 4 மதகுகளின் வழியாக பவானியாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும்,மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பவானியாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டவாறு கரை புரண்டோடுகிறது.

    இந்நிலையில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும்,ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும்,தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் 5 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×