என் மலர்
நீங்கள் தேடியது "Warning awareness among the public"
- யானைகள் நடமாட்டத்தால் எச்சரிக்கை
- வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனசரக பகுதியில் நாய்க்கனேரி, சேராங்கல், பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி உள்ளிட்ட காப்புக் காடுகளில் சிறுத்தைகள், யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
சில நாட்களாக ஆந்திரா எல்லை நெல்லிபட்லா வனப்பகுதியிலிருந்து ஒரு குட்டி யானையுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான அரவட்லா, பாஸ்மார் மலை கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் புதுவரவாக ஆந்திரா மாநிலம் கடப்பனத்தம் பகுதியிலிருந்து 3 குட்டி யானைகளுடன் கூடிய மொத்தம் 9 காட்டு யானைகள் தமிழக எல்லையில் உள்ள கோட்டையூர் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள நிலங்களில் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி தென்னஞ்செடிகளை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்திலிருந்து ஆந்திராமாநிலம் வீ.கோட்டா செல்லும் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகின்றன.
பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்களிடையே எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனச்சரகர் சதீஷ்குமார் கூறியதாவது:-
வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பத்தலப்பல்லி மலைப்பாதை வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்களில் மாலை 6 மணி முதல் இரவு நேரத்தில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






