search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vietnam wars"

    • வியட்னாம் போர் 20 வருடங்கள் நடந்தது
    • 1973ல் அமெரிக்க படை வியட்னாமில் இருந்து வெளியேறியது

    1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷியாவும் வட வியட்னாமிற்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமிற்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக ஆதரவு வழங்கின.

    வியட்னாம் போர் என அழைக்கப்படும் இப்போர், சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் தீவிரமாக பங்கேற்ற அமெரிக்க ராணுவத்தால் வியட்னாம் நாட்டு கொரில்லா போர்முறையினை சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து, 1973 ஆண்டு அமெரிக்க படை தெற்கு வியட்னாமை விட்டு வெளியேறியது.

    இந்நிலையில், ஜி20 18-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று வியட்னாம் தலைநகர் ஹேனோய் சென்றார். அங்கு அவர் அந்நாட்டுடன் ஒருங்கிணைந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

    வியட்னாம் போர் முடிந்து சுமார் 50 வருட காலம் கழித்து, அந்நாட்டுடன் முக்கிய இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நீண்டகால நட்பு நாடான வியட்னாம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் புரிவது சீனாவை அமெரிக்கா தனிமைப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    ஆனால், இதனை மறுத்த ஜோ பைடன், "பனிப்போர் காலத்தை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒரு நிலையான, வளரக்கூடிய பொருளாதார தளத்தை அமைத்து கொள்வதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம். சர்வதேச சமூகத்தில் வியட்னாம் ஒரு நட்பான, நம்பிக்கையான மற்றும் பொறுப்புள்ள கூட்டாளி. சீனாவை கட்டுப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவிற்கு வியட்னாம் 127 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்வதும், 2022-ல் வியட்னாமை விட 4 மடங்கு அதிகம் சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    உலக வர்த்தகத்தில் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பும், ஏற்றுமதியும் மிக பெரியது என்றும் அதனை வியட்னாம் ஈடு செய்வது கடினம் என்பதாலும் இந்த ஒப்பந்தத்தின் பலன் சில வருடங்கள் கடந்துதான் தெரிய வரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×