search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viduthalai chiruthaikal katchi volunteer"

    சேலம் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியது தொடர்பாக விடுதலை சிறுத்தை தொண்டரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசி விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 20-ந் தேதி வெளியானது.

    ஏற்கனவே ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் தகவல் பரப்பியதால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. இதற்கிடையே கெங்கவல்லியிலும் ஒரு சமூகத்தை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கானிகேர், ஆத்தூர் டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கேசவன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மற்றொரு சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலை தளங்களில் வெளியிட்டது கெங்கவல்லி அருகே உள்ள புனல் வாசல் கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டரான மகாலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து சென்ற போலீசார் கெங்கவல்லி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கெங்கவல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்கள் சமூகம் தொடர்பாக அவதூறு பரப்பிய மகாலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் கெங்கவல்லியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

    பின்னர் ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மகாலிங்கத்திடம் விசாரித்த போது, பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டித்து அந்த சமூகத்தினரை இழிவாக பேசி சமூக வலைதளங்களில வெளியிட்டது தெரியவந்தது.

    இதற்கிடையே சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் சேலம் ஜே.எம்.5 கோர்ட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆத்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் தங்கவளவன் உள்பட பலர் ஒரு புகார் கொடுத்தனர். அதில் மகாலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தது போல பொன்பரப்பியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதனை அம்மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து கெங்கவல்லி சுற்று வட்டார பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    ×