search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaseline"

    • பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும்.
    • உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.

    பெண்களின் சருமம் பனிக்காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம்…?

    சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படுமந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும்.

    இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைய் தன்மையும் சருமத்திற்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

    பனிக்காலத்தில் குளிர்காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைய் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.

     உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.

    பனிக்காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

    பனிக்காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.

    உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.

     பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது.

    சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

    பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.

    பனிக்காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டி தேய்த்து நன்றாக சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்' தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

     தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக்காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

    பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையும் பராமரிக்கபடும்.

    முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய்த் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.

    ×