search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "various design"

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கரூர்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.



    இதையொட்டி கரூர் திருமாநிலையூர் சுங்ககேட் பகுதியில் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் ராஜஸ்தானை சேர்ந்த சத்ராராம் என்கிற தொழிலாளி தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்போது விநாயகர் சிலைகளை பலவடிவங்களில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என்கிற விலையில் விற்கப்படுகின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் சாக்பீஸ் தயாரிக்க பயன்படுத்தும் மாவினை கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்படுவதால் நீர்நிலைகளில் கரைக்கும் போது சுற்றுப்புறத்திற்கு தீங்கு ஏற்படாது என சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றிவிநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், ராஜவிநாயகர், சுயம்புவிநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதால் கரூர், குளித்தலை, மாயனூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளி சத்ராராமிடம் கேட்ட போது கூறியதாவது:-

    ராஜஸ்தானை சேர்ந்த எங்களது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக கரூரில் தங்கி கொலுபொம்மைகள் உள்ளிட்டவை செய்து தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பில் இறங்கியுள்ளோம். திருச்சியிலிருந்து சாக்பீஸ் தயாரிக்கப்படும் மாவினை வாங்கி வந்து தண்ணீரில் கரைத்து லாவகமாக அச்சில் வார்த்து அதனை காயவைத்து சிலைகளாக உருவாக்கி வருகிறோம். பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கும் போது அதன்உள்புற பகுதியில் தேங்காய்நார்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதன் கட்டமைப்பை வலிமையானதாக உருவாக்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் இந்து முன்னணி சார்பில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருப்பதையொட்டி கரூர் செட்டிப்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். 
    ×