என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varadadu"

    • வடமாடு மஞ்சுவிரட்டுக்கு திடீர் தடை ஏற்பட்டதால் வீரர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
    • மே மாதத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தக்கூடாது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான்-மேட்டுநீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதிஅய்யனார் கோவில் இரு கிராமங்களுக்கு இடையே வயல்வெளிகளுக்குள் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி கடைசிவாரம் பொங்கல் திருவிழாவில் பெட்டி எடுப்பு, புரவிஎடுப்பு, எருதுகட்டு, முளைப்பாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 2 நாள் நடந்தது. இந்த கோவிலில் உள்ள ஆதிஅய்யனாருக்கு முதல்நாள் சந்தனகாப்பு அலங்காரமும், 2-ம் நாள் வௌ்ளிகாப்பு அலங்காரமும்; செய்யப்பட்டது.

    முதல்நாளான நேற்று முன்தினம் மாலை நீரேத்தான் அய்யனார் கோவில் வீட்டில் இருந்து பெட்டி எடுத்துவரப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக 2 கி.மீ. தூரம் சென்று கோவிலை அடைந்தது. கொரோனா தடைக்கு பிறகு திருவிழா நடந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். 2-ம் நாளான நேற்று தாதம்பட்டி நீரேத்தான் மந்தைதிடலில் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக தென்னை நார்கழிவுகளை திடலில் பரப்பி நடுகல்லில் ஈச்சநார்-கோரை புல்லால் கட்டப்பட்ட வடத்தின் ஒருமுனையை கட்டி மறுமுனையை ஜல்லிகட்டு மாட்டின் கழுத்தில் கட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்திற்கு பின்னர் ஜல்லிகட்டுக்கு தடை நீக்கப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிகட்டு நடத்த சில விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிகட்டுநடத்த அனுமதிவழங்கப்பட்டது.

    அதனால் கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் எருதுகட்டு நடத்த முடியவில்லை. வாடிப்பட்டி பகுதியில் குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமாக 60மாடுகள் வரை வளர்த்துவருகின்றனர். இதுபோன்ற ஜல்லிகட்டு, எருதுகட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுபெறுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

    மே மாதத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தக்கூடாது என்பதை அறியாத இளைஞர்கள் மாடுகளுக்கு பயிற்சியளித்து அலங்காரம் செய்து மந்தை திடலுக்கு அழைத்துவந்திருந்தனர்.

    மஞ்சுவிரட்டு நடத்த திடீர் தடை விதிக்கப்பட்டதால் வீரர்கள் நடுகல்லை தொட்டுவணங்கி வழிபாடுசெய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த எருதுகட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்த தாதம்பட்டி, நீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, குலசேகரன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் வேதனையுடன் திரும்பிசென்றனர்.

    மந்தை திடல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இனிவரும் காலங்களில் விழாக்குழுவினர் வடமாடு மஞ்சுவிரட்டை ஜனவரியில் இருந்து மே மாதத்திற்குள் ஏதாவது ஒருமாதத்தில் நடத்த ஆவணசெய்யவேண்டும் அல்லது இந்ததிருவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துகூறி மற்ற கிராமங்களில் நடத்துவது போல் முன்னேற்பாடு செய்து கோர்ட்டு மூலம் அனுமதிபெற்று நடத்தவேண்டும் என்று மாடுபிடிவீரர்களும், காளைவளர்ப்போரும் கோரிக்கை விடுத்தனர்.

    ×