என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiko Thoothukudi firing"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 2009-ம் ஆண்டு தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வைகோ உள்பட 159 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார். அவருடன் வழக்கில் தொடர்புடையவர்களும் ஆஜரானார்கள். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த அன்றே இரவில் பாதிக்கப்பட்ட மக்களை நான் சென்று பார்த்தேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்பு நாங்கள் போராடியபோது எங்களை கைது செய்து பாதுகாப்பாக மறுநாள் விடுவித்தனர். ஆனால் இப்போது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றுள்ளார்கள்.

    இது திட்டமிட்ட படுகொலை. அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக செயல்படுகிறது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற சில அரசியல் தலைவர்களுக்கு அரசு தடை விதித்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்தான் ஆலையை மூடியுள்ளது.


    முன்னர் இதுபோன்ற சூழலில் சுப்ரீம் கோர்ட்டு சென்று ஆலையை திறந்து விட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு சமுதாய மக்கள் மட்டும் போராடவில்லை. எல்லா சமுதாயத்தினரும் போராடினார்கள். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலர் கருத்து கூறியவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் மற்றும் வக்கீல் செல்வம், செங்குட்டுவன், நக்கீரன், மகாராஜன், நகர செயலாளர் முருக பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ThoothukudiFiring #MDMK #Vaiko
    ×