search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two Tamil Nadu Tourists"

    கோவாவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சம்பவங்களில் தமிழக வாலிபர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ‘செல்பி’ எடுக்க முயன்ற போது இந்த பயங்கரம் நிகழ்ந்தது.
    பனாஜி:

    உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக கோவா மாநிலம் விளங்குகிறது. இங்குள்ள அழகான கடற்கரைகளை காண வரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி செல்கின்றனர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் கடலில் குளிக்கவோ, நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி முதல் 4 மாதங்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு குழுவினர் கடந்த 16-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அன்று மாலையில் அவர்கள் வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு சென்றனர்.

    இதில் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்ற வாலிபர் உள்பட 3 பேர் கடலுக்குள் இறங்கி, அங்கிருந்த பாறை மீது ஏறினர். பின்னர் அந்த பாறையில் நின்றவாறு அவர்கள் தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ராட்சத அலை ஒன்று திடீரென எழுந்து அவர்கள் 3 பேரையும் இழுத்துச்சென்றது. இதில் தினேஷ் குமார் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். தினேஷ் குமாரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.

    இதைப்போல கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், அங்குள்ள சிக்குரியம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றனர். அவர்களும் கடலுக்குள் இருந்த பாறைகளில் ஏறி ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை ஒன்று சசிகுமார் வாசன் (33) என்ற வாலிபரை இழுத்துச்சென்றது. இதில் அவரும் கடலில் மூழ்கி இறந்தார். இதனால் சக நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இரு சம்பவங்களிலும் உயிரிழந்த 2 வாலிபர்களின் உடலும் பனாஜி அருகே உள்ள கோவா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் ‘செல்பி’ மோகத்தால் அடுத்தடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×