search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuberculosis Hospital"

    தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் ரூ.8 கோடியில் அபிவிருத்தி பணிகள் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#minister #vijayabaskar #health
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க, போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த 3 மாதங்களில் ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சர்வதேச அளவில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதுடன், மாதம் ரூ.500 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளுக்கு முன்உதாரணமாக மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் மருத்துவமனை உள்ளது. அங்கு டாக்டர்கள், நோயாளிகள் நண்பர்களாக செயல்படுகின்றனர்.

    அதுபோல் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையையும் மாற்ற தோப்பூரில் உள்ள மருத்துவமனையின் டாக்டர் காந்திமதிநாதன் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமத்தினருடன் இணைந்து உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் ரூ.6 கோடி செலவில் புதிய வெளிநோயாளிகள் பிரிவு கட்டப்படவுள்ளது. இது தவிர, ரூ.2 கோடியில் பல்வேறு பணிகளும் என ரூ.8 கோடியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளது.

    சென்னை மாநகராட்சியில் காசநோயை ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மருந்து வினியோகம் செய்பவர்களின் பங்கு முக்கியம்.

    டாக்டர்கள் அனுமதி இன்றி காசநோய்க்கு மருந்துகள் கேட்போர் குறித்து அரசுக்கு மருந்து கடைக்காரர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர். #minister #vijayabaskar #health
    ×