என் மலர்
நீங்கள் தேடியது "toll plazas"
- சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாகனங்களின் சக்கரங்களின் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஃபாஸ்டேக் முறை நடைமுறையில் உள்ளது. வாகனங்கள் சுங்க சாவடியை கடக்கும்போது கேமராக்கள் மூலம் பதிவு எண் ஸ்கேன் செய்யப்பட்டு, வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் சென்றால் மட்டுமே கட்டணம் பிடிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் செல்லாத வாகனங்களுக்கும் கட்டணம் பிடிக்கப்பட்டதை பார்த்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கார், வேன், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்தது. பலர் புகார் கொடுக்காமல் சென்றுவிடுவது உண்டு.
தமிழ்நாட்டில் மதுரவாயல், பரனூர், விக்கிரவாண்டி, போரூர், புழல் உள்ளிட்ட அனைத்து சுங்க சாவடிகளிலும் இந்த தவறு நடை பெற்றுள்ளது. இது பற்றி லாரி உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது போன்ற தவறுகள் நாடு முழுவதும் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்தார். 2025 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 464 கோடி ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் 17.66 லட்சம் தவறான பணம் பிடித்தம் செய்யப்பட்டு மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுங்கச் சாவடிகளில் தவறாக பணம் பிடித்தம் செய்யப்பட்டு 17.7 லட்சம் வழக்குகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணத்தை திருப்பி வழங்கியுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், மற்றும் சுங்கச்சாவடியில் செல்லாமலேயே பிடித்தம் செய்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்க சாவடி ஊழியர்கள் வாகன விவரங்களை கை முறையாக பதிவு செய்யும் போது ஏற்படும் பிழைகளால் இத்தகைய பரிவர்த்தனைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முறையை முழுமையாக கைவிடுவது குறித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தவறான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும் இது நடக்கக்கூடாது. சுங்க கட்டணத்தை பிடித்தம் செய்ய வாகன பதிவு எண்களை கம்ப்யூட்டரில் கைமுறையாக பதிவிடும் நடைமுறையை விரைவில் நிறுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.






