search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli bjp protest"

    நெல்லை அருகே தாமிரபரணி தண்ணீரை திருப்பி விடக்கோரி பா.ஜ.க.வினர் குளத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலந்தது. இந்த தண்ணீரை கால்வாய்கள் மூலமாக குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என பா.ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பா.ஜ.க.வினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் நெல்லையை அடுத்த குறிச்சிகுளத்தில் திரண்டார்கள். தாமிரபரணி தண்ணீரை குறிச்சி குளத்திற்கு திருப்பி விட வேண்டும், குளத்தை தூர்வாரி மடைகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திடீரென குளத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். இதில் கணேஷ்குமார் ஆதித்தன், மகாராஜன், சுரேஷ், வேல் ஆறுமுகம் மற்றும் குறிச்சி குளம் ஊர் நாட்டாண்மை சண்முகவேல், கணபதி, பாண்டி, அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து பா.ஜ.க.வினர் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், ‘குறிச்சிகுளம் மூலமாக 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் அருகே வண்ணான் பச்சேரி, கட்டுடையார் குடியிருப்பு, புதுக்குளம் ஆகிய குளங்களும் உள்ளன. தற்போது வெள்ளம் காரணமாக தாமிரபரணியில் வீணாக சென்ற நீரை இந்த குளங்களுக்கு திருப்ப வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே நடவடிக்கை எடுக்கும் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.
    ×