search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theodore McCarrick"

    ஓரினச்சேர்க்கையாளரை பாதுகாக்க முயன்றதற்காக போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைக்கு அவர் பதில் அளித்துள்ளார். #Pope #Popekeepssilent #TheodoreMcCarrick
    வாட்டிகன் சிட்டி:

    அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள இரு திருச்சபைகளில் பணியாற்றியவர் தியோடர் மெக்காரிக் (88). கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருந்தபோது அங்கு திருமறை பயில வந்த ஆண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, மெக்காரிக் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.

    தியோடர் மெக்காரிக்

    இதுதொடர்பாக வாட்டிகன் அரண்மனை விசாரணை நடத்திவந்த நிலையில்  கார்டினல்கள் கல்லூரி விரிவுரையாளர் பணியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். அவர் வேறு எங்கும் மதப்பிரசாரங்களில் ஈடுபட வாட்டிகன் அரண்மனை தடை விதித்துள்ளது.

    இதற்கிடையில், அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அங்கு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததுடன் இந்த பாவச்செயல் புரிந்தோரை மன்னிக்கும்படி கடவுளிடம் நேற்று பிரார்த்தனை செய்தார்.

    இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பதவியில் இருந்து பிரான்சிஸ் பதவி விலக வேண்டும் என வாட்டிகன் அரண்மனையின் முன்னாள் அதிகாரியான கார்லோ மரியோ விகானோ என்பவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, 11 பக்கங்களை கொண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, ‘அமெரிக்காவில் பாதிரியார் மெக்காரிக் நடத்திய பாலியல் லீலைகளை கடந்த 2013-ம் ஆண்டு அவர் போப் ஆக பதவியேற்ற காலத்தில் நான் பிரான்சிஸிடம் தெரிவித்தேன்.

    ஆனால், நான் மெக்காரிக்கை பற்றி நேரடியாக புகார் அளித்தும் அவர் மீது 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்துக்காக அவரது போப் பதவியை பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தேவாலயங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என போப் பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    சர்வதேச தேவாலயம் தற்போது சந்தித்துள்ள நெருக்கடியான நிலையில் தனது தவறுகளை அவர் உணர வேண்டும்.

    பாலியல் பலாத்காரங்களில் தொடர்புடையவர்கள், புகார்களை மறைக்க காரணமாக இருந்த மற்றவர்களுடன் சேர்ந்து போப் பிரான்சிஸும் பதவி விலக வேண்டும்’ என குறிப்பிட்டார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் வாழும் சுமார் 125 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கார்லோ மரியா விகானோ

    போப் பிரான்சிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என தற்போது போர்க்கொடி தூக்கியுள்ள ஆர்ச் பிஷப் கார்லோ மரியா விகானோ, கடந்த 2001-2006 ஆண்டுகளுக்கிடையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் அரண்மனை தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு ரோம் நகருக்கு திரும்பும் வழியில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கார்லோ மரியா விகானோ எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மற்றும் ராஜினாமா கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், ‘இந்த விவகாரம் தொடர்பாக ஒரேயொரு வார்த்தைகூட பேசத் தயாராக இல்லை’ என்று குறிப்பிட்டார்.

    என்மீதான குற்றச்சாட்டுகளை கவனமாக படித்துப் பார்த்து பத்திரிகையாளர்களான நீங்களே இதுதொடர்பாக தீர்மானிக்கலாம் என உங்களை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்த பின்னர் சிறிது காலத்துக்கு பின்னர் நான் பேச ஆசைப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  #Pope #Popekeepssilent #TheodoreMcCarrick
    ×