search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni News: Broadgauge Train"

    தேனி - மதுரை இடையே 12 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரெயில்பாதையில் வருகிற 26ம் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது.
    தேனி:

    12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 26-ந்தேதி மதுரை- தேனி இடையே ரெயில் சேவையை பிரதமர் மோடி சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    1928-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரளாவில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப்பொருட்களின் வர்த்தகத்திற்காக போடி-மதுரை இடையே ரெயில்போக்குவரத்து தொடங்கப்பட்டது. நாடு  முழுவதும் மீட்டர்ேகஜ் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை-போடி ரெயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடி அகலரெயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

    2020-ல் மதுரை-உசிலம்பட்டி இடையிலான 37 கி.மீ தூர ரெயில் பாதையை ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி மனோகரன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் உசிலம்பட்டி-ஆண்டிபட்டி இடையிலான 21 கி.மீ பாதையை ரெயில்வே அதிகாரி அபய்குமார்ராய் ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி-தேனி இடையே 17 கி.மீ தூரத்தை கடந்த மார்ச் மாதம் ஆய்வு செய்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ்அரோரா 3 மாதத்திற்குள் மதுரை-தேனி இடையே ரெயில்சேவையை தொடங்கலாம் என அனுமதி அளித்தார்.

    தமிழகத்தில் மே 26-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை சென்னையில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார். இதன் ஒரு பகுதியாக மதுரை-தேனி அகல ரெயில்பாதையையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே புதிய ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே ரெயில்சேவை தொடங்க இருப்பதால் 2 மாவட்ட மக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மே 27-ந்தேதி முதல் தினசரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மதுரையில் காலை 8.30 மணிக்கு புறப்படுகிறது. 8.45 மணிக்கு வடபழஞ்சியிலும், உசிலம்பட்டியில் 9.05 மணிக்கும், ஆண்டிபட்டியில் 9.20 மணிக்கும் வந்து தேனிக்கு காலை 9.35 மணிக்கு வந்து சேருகிறது. அதேபோல் தேனியில் மாலை 6.15 புறப்பட்டு ஆண்டிபட்டியில் 6.29க்கும், உசிலம்பட்டியில் 6.47-க்கும், வடபழஞ்சியில் 7.05-க்கும், புறப்பட்டு மதுரைக்கு 7.35மணிக்கு செல்கிறது.

    ×