என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The school buildings are also dilapidated and crumbling"

    • கண்ணமங்கலம் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
    • புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதியில் கிராம சபை நகர சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.அதன்படி கண்ணமங்கலம் பேரூராட்சியின் கிராம சபை கூட்டம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி கலந்து கொண்டார்.துணைத் தலைவர் குமார், செயல் அலுவலர் சுதா கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி இந்த பள்ளியில் 147 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 4 பள்ளி கட்டிடங்களும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு இந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதே போல் இந்த பள்ளியில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதியும் இல்லாததால் அவதி அடைந்து வருவதாக கதறி அழுதபடி கோரிக்கை வைத்தார்.

    பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு கிராம சபை கூட்டத்தில் கதறி அழுதபடி தலைமை ஆசிரியை ஒருவர் கோரிக்கை வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை ஆசிரியையின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தன் மேற்பார்வையில் பாழடைந்த கட்டிடங்கள் பொக்லைன் எயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

    ×