என் மலர்
நீங்கள் தேடியது "The husband is an illusion"
- கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்
- போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே 2 மனைவிகளை தவிக்க விட்டு கணவன் மாயமானது தொடர்பாக இருதரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் அடுத்த பழைய மின்னூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 23), கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (21).
தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்னூர் பகுதியை சேர்ந்த சுவேதா என்பவரை 2-வதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதே சமயத்தில் சுவேதாவின் உறவினர்கள் பெண்ணை காணவில்லை என ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையில் தாமோதரன் மற்றும் சுவேத ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாலுகா போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது போலீசார் 2 பேரின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தாமோதரன் தனது 2 மனைவிகளையும் விட்டுவிட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
நேற்று இரவு தாமோதரன் வீட்டுக்கு வந்த சுவேதாவின் உறவினர்கள், உன் மகன் எங்கே என கேட்டு தாமோதரனின் தாய் மலரை சரமாரியாக தாக்கினர்.
அதனைப் பார்த்த மலரின் உறவினர்கள் எதிர் தரப்பினரை தாக்கியதால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மலர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அங்கு மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






