search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "That boot fruits"

    • விவசாயிகள் மாற்றுப் பயிர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
    • தென்னை மரங்களுக்கிடையில் படர விட்டு சாகுபடி செய்துள்ளனர்.

    உடுமலை:

    புதிய மாற்றங்கள் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் புதிய முயற்சிகள் மூலமாகவே வெற்றியடைய முடியும் என்ற நிலை உள்ளது. இது விவசாயத்துக்கும் பொருந்துவதாகவே உள்ளது. பல்வேறு சிக்கல்களால் சவால் நிறைந்ததாக மாறியுள்ள விவசாயத்தில் புதிய ரக விதைகள், புதிய விவசாயக் கருவிகள், புதிய சாகுபடி முறைகள் என பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

    இந்தநிலையில் உடுமலை பகுதியில் மாற்றங்களை விரும்பும் விவசாயிகள் இந்த பகுதியில் ஏற்கனவே விளைவிக்கப்படாத புதிய ரகங்களை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தக்காளி, சின்ன வெங்காயம், பீட்ரூட் என குறிப்பிட்ட சிலவகை காய்கறிகள் மற்றும் மா, வாழை, கொய்யா என குறிப்பிட்ட சிலவகை பழங்கள் என்று சாகுபடி செய்து வந்த விவசாயிகள் மாற்றுப் பயிர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

    அந்தவகையில் பேஷன் ப்ரூட் எனப்படும் தாட் பூட் பழங்களை சோதனை முயற்சியாக உடுமலை பகுதியில் சாகுபடி செய்துள்ளனர்.குளிர்ச்சியான மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் இந்தவகை பழங்கள் உடுமலை பகுதியில் நிலவும் குளிர்ந்த வானிலையால் வெற்றிகரமான சாகுபடிப் பயிராக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பழத்தை கையால் அழுத்தித் தொட்டால் பட்டாசு வெடிப்பது போல சத்தம் வருவதால் இதனை பட்டாசுப்பழம் என்றும் அழைப்பார்கள்.

    தாட்பூட் பழங்கள் எளிதில் அழுகுவதில்லை என்பதால் விற்பனையாளர்கள் அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். ரத்த அழுத்தம், புற்று நோய், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த பழம் உள்ளது என்று மக்கள் நம்புவதால் அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.புளிப்பு கலந்த இனிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை குளிர் பானங்கள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த பழத்திலிருந்து ஜெல்லி மிட்டாய், சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தோலை உரமாக்கலாம் மற்றும் இலைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் மருந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. வெளி நாட்டுப் பழங்களை விரும்பி உண்பது பேஷனாகி வரும் இன்றைய நிலையில் பேஷன் ப்ரூட் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தரக்கூடியதாக இருக்கும்.

    கொடி வகைப் பயிரான இதனை தற்போது தென்னை மரங்களுக்கிடையில் படர விட்டு சாகுபடி செய்துள்ளனர்.சோதனை முயற்சியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பேஷன் ப்ரூட் நன்கு காய்க்கத் தொடங்கியுள்ளது.எனவே தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைத்து சாகுபடி செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×