search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textbooks Syllabus"

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. புதிய புத்தகம் அச்சிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

    போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.

    அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
    ×