search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea production"

    • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. அங்கு விளையும் பசுந்தேயிலை சிறப்பு வாய்ந்தது. எனவே இதற்கு நாடு முழுவதும் நல்ல கிராக்கி உள்ளது.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு போதிய கொள்முதல் விலை தரப்படுவது இல்லை. எனவே நீலகிரியில் வசிக்கும் தேயிலை விவசாயிகள் சங்கத்தினர் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஊட்டி இளம் படுகர் சங்க கட்டிடத்தில் சிறுகுறு தேயிலை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நாக்குபெட்டா படுகர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு, தொதநாடு நல சங்க செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் போஜன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன், மேற்கு நாடு நலச்சங்க தலைவர் தாத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கோரி மத்திய-மாநில அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினோம். அடுத்தபடியாக நீலகிரியில் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். மாவட்ட நிர்வாகம் தடுத்துவிட்டது. பின்னர் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி, சிறியூர், மசினகுடி கோவில்களுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் அம்மன்களிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்டம் முழுவதும் பொறங்காடு, குந்தா, மேற்குநாடு, தொதநாடு ஆகிய 4 சீமைகளை சேர்ந்த 400 கிராம விவசாயிகளை திரட்டி வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து உள்ளோம்.

    நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும்வரை எங்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×