search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TDP MP Diwakar Reddy"

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை விவாதத்திற்கு வரும்போது அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என கூறியுள்ளார். #MonsoonSession #Parliament #TDPMP
    அமராவதி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.



    இதில், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக நாளை விவாதம் நடத்தப்படுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி, நாளை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாதத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொறடா உத்தரவிடுவது வழக்கமான நடைமுறைதான். எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி கவிழப்போவதில்லை. என்னாலும் விவாதத்தின்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேச முடியாது. எனவே நான் சபையில் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை’ என்றார்.

    இவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவரை தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தொடர்பு கொண்டு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MonsoonSession #Parliament #TDPMP
    ×