search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanjore Government School"

    மனித வாழ்க்கையில் மாணவ பருவம் மறக்க முடியாதது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்தித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அரசர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1986-ம் ஆண்டு 1992-ம் ஆண்டுவரை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டது. அந்த கால கட்டத்தில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் காமராஜ் என்பவர் அரசர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விரும்பினார்.

    இதைத்தொடர்ந்து அவர் தன்னுடன் படித்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்து முன்னாள் மாணவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்தார். மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்று திரட்டி இன்று அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அன்பு மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். தங்கள் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

    விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்களது சந்திப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். முன்னாள் ஆசிரியர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

    முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலி வடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுத்தனர்.

    தற்போது முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு அலுவலர்களாகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், ராணுவ வீரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    26 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள அன்பை பரிமாறி கொண்ட இவர்களின் சந்திப்பு மிகவும் நெகழ்ச்சியானது, மகிழ்ச்சிக்குரியது என்பதில் ஐயமில்லை. #tamilnews
    ×