என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweating Irrigation"

    • ராணுவத்திற்கு தரமான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்டவர் தங்கவேலு.
    • குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த நீர் பாசன முறையை, வீட்டில் வளர்க்கும் அனைத்து செடிகளுக்கும், மரக்கன்றுகளுக்கும் பயன்படுத்தலாம்.

    நீரின்றி அமையாது உலகு...

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர் வாழ தண்ணீர் அவசியமானது. அவற்றில் தாவரமும் விதி விலக்கல்ல. மனித உடல் 70% நீரைக்கொண்டது. ஆனால் தாவரம் 90% நீரை கொண்டுள்ளது.

    பயிர்கள் செழித்து வளர தண்ணீர் முக்கியமானதாக இருக்கிறது. அது சரியாக கிடைக்காவிட்டால் பயிர் வளராமல் பட்டுப் போய் விடும். பயிர்களுக்கு தேவையான அளவு தண்ணீர், தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனால் விவசாயத்தில் நீர் பாசன முறை பின்பற்றப்படுகிறது.

    நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை பாரம்பரிய முறை மற்றும் நவீன முறை என இரு வகைப்படுத்தலாம். நவீன முறையில் தெளிப்பான் மற்றும் சொட்டு நீர் பாசன அமைப்பு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் என்பது பயிர்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பயிர் விளைச்சலை கெடுத்து விடும்.

    தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களிலும் புதுமையை புகுத்த வேண்டியிருக்கிறது. அதுபோலத்தான் விவசாயத்திலும் புதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதிலும் விவசாயத்திற்கு முன்பு போல் வேலையாட்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அவர்களுக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கிறது.

    இதன் காரணமாக பயிரை விளைவிக்க அதிக செலவு ஆகிறது. போதிய தண்ணீர் கிடைக்காமை, வேலை ஆட்கள் இல்லாமை இப்படி பல பிரச்சனைகளை சமாளித்து பயிரிட்டு அறுவடை செய்தால் போதிய வருமானம் கிடைப்பதில்லை.

    இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் நீர்ப்பாசனத்தில் புதிதாக ஒரு முறையை தொழிலதிபர் ஒருவர் கண்டறிந்து இருக்கிறார். நெல்லை மாவட்டம் கன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் மும்பையில் ராணுவ தளவாடங்களுக்கான ரப்பர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான VAKO SEALS-ன் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 

    தொழிலதிபர் தங்கவேலு

    தொழிலதிபர் தங்கவேலு

    1996-97 ஆண்டுகளில் இந்திய ராணுவத்திற்கான தளவாடங்களுக்கு ரப்பர் உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்தற்கு அப்போது மத்திய ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தேசிய விருது பெற்றிருக்கிறார். ராணுவத்திற்கு தரமான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுத்ததற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமால் பாராட்டப்பட்டவர். பிரபலமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போதிலும், தங்கவேலுக்கு விவசாயம் மீது அதிக ஆர்வம். இதன் காரணமாக தனது ஊரில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை வாங்கி பல்வேறு விதமான பயிர்களை வளர்த்து வருகிறார். விவசாயத்துடன் மாடுகள் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் நீர்ப்பாசனத்திற்கு புதிய முறையை கண்டறிந்து இருக்கிறார்.

    அந்த முறை பற்றி அவர் கூறியதாவது:-

    பொதுவாக தாவரத்திற்கு தண்ணீர் தேவையான அளவு கிடைக்கவேண்டும். தற்போதைய சூழலில் தண்ணீர் என்பது தேவையை விட குறைவாக தான் இருக்கிறது. இதனால் அனைத்து விஷயங்களிலும் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது. விவசாயத்திற்கும் அதனை கடைபிடிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் தான் SWEATING IRRIGATION என்ற புதிய நீர்ப்பாசன முறை எனது சிந்தனைக்கு தோன்றியது. 

    அதன்படி நாம் வளர்க்கும் செடிகளுக்கு அருகே (செடிகளுக்கு தகுந்தாற்போல் ஒன்று முதல் ஐந்து அடி தூரத்தில்) நிலத்தின் அடியில் ஒரு மண்பானையை புதைத்து வைக்க வேண்டும். கழுத்துப்பகுதி நிலப்பரப்பிற்கு மேல் இருக்கும் வகையில் அதனை மண்ணுக்குள் புதைத்து வைக்க வேண்டும்.

    அந்த பானைக்குள் ஒரு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அந்த பானையை மூடியால் மூடி வைப்பது அவசியமாகும். பொதுவாக மண் பானைகள், உள்ளே இருக்கும் தண்ணீரை பானைக்கு வெளியே கசிந்தபடி இருக்கும்.

    இந்த முறை தான் நமது நீர்ப்பாசன முறைக்கு உதவுகிறது. நிலத்திற்குள் மண் பானையை வைத்து தண்ணீரை நிரப்பும்போது, அதில் இருந்து கசியும் (வியர்க்கும்) தண்ணீர் நிலத்தை ஈரமாக்கியபடி இருக்கிறது. அந்த தண்ணீர் தான் செடிக்கு கிடைக்கிறது. பொதுவாக செடிகளுக்கு தண்ணீரை நிலப்பரப்பில் பாய்ச்சும்போது, தேவையில்லாத நிலப்பரப்பும் தண்ணீரைப் பெறுகிறது.

    இதன் காரணமாக செடியை தவிர தேவையில்லாத இடத்திற்கும் தண்ணீர் செல்கிறது. அதிக அளவில் தண்ணீர் செலவாகிறது. ஆனால் SWEATING IRRIGATION நீர்ப்பாசன முறையில் குறிப்பிட்ட செடிக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்க செய்கிறது. இதனால் அதிக அளவிலான தண்ணீர் விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.

    நிலத்தின் மேற்பரப்பு ஈரம் ஆவதே களைச்செடிகள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றன. இந்த முறையில் நிலத்தின் மேல்பரப்பு ஈரம் ஆவதில்லை. நிலத்தின் மேல் பரப்பிலிருந்து ஐந்து இன்ச் அளவுக்கு கீழே உள்ள நிலப்பரப்பே ஈரமாகிறது. 

    இதனால் நாம் வளர்க்கக்கூடிய செடிகளுக்கு அருகே தேவையில்லாத களைச்செடிகள் வளர்வது இல்லை. இதனால் களைச்செடிகளை அகற்றுவதற்காக தனியாக நாம் ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற நீர்ப்பாசன முறைகளில் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இந்த நீர்ப்பாசன முறையில் பானை மட்டும் வாங்க செலவு செய்ய வேண்டும். அதற்கான செலவும் குறைவானதே. இரண்டு செடிகள் முதல் நான்கு செடிகளுக்கு ஒரு பானை வைத்தாலே போதும். அவ்வாறு வைக்கப்படும் பானையில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை ஊற்றி வைத்தால் போதும். அந்த பானையின் அருகே உள்ள செடிகளுக்கு போதுமான தண்ணீரை அது வழங்கியபடியே இருக்கும். விவசாயத்திற்கு மண்புழு என்பது மிகவும் அவசியம். பயிர்கள் வளர்வதற்கு ஏதுவாக மண்ணை பக்குவப்படுத்துவது மண்புழுக்கள் தான். இந்த நீர்ப்பாசன முறை நிலத்தின் அடிபரப்பை ஈரமாக்குவதால், மண்புழு உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கிறது. மண்புழுக்கள் அதிகளவில் பெருகும்போது செடிகள் நன்கு வளரும்.

    குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த நீர் பாசன முறையை, வீட்டில் வளர்க்கும் அனைத்து செடிகளுக்கும், மரக்கன்றுகளுக்கும் பயன்படுத்தலாம். மற்ற நீர்ப்பாசன முறைகளை ஒப்பிடுகையில், இந்த நீர்ப்பாசன முறைக்கான செலவு மிக மிக குறைவு ஆகும். செலவுகளை குறைத்து விவசாயம் செய்து அதிக பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×