என் மலர்
நீங்கள் தேடியது "successor. Strong pictures"
- விஜய் - அஜித் ரசிகர்களுக்கு போலீசார் திடீர் கட்டுப்பாடு
- வேலூரில் மோதலை தடுக்க நடவடிக்கை
வேலூர்:
பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு அஜித் நடிப்பில் துணிவு படங்கள் நாளை வெளியாகிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு அஜித் நடித்த துணிவு படம் வெளியிடப்படுகிறது.
இதனையொட்டி வேலூரில் அஜித், விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்துள்ளனர்.சினிமா படங்கள் வெற்றி பெற வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் வேலூர், காட்பாடி மாநகரப் பகுதிகளில் அஜித் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
வேலூரில் ஒரு சில தியேட்டர்களில் 2 படங்களும் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.
ஒரு சில தியேட்டர்களில் ரசிகர் மன்றங்கள் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன.
வேலூரில் உள்ள விஜய் ரசிகர்கள் அலங்கார் தியேட்டரிலும், அஜித் ரசிகர்கள் காட்பாடி ஆஸ்கார் தியேட்டரிலும் சிறப்பு கொண்டாட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.
ரசிகர்களுக்காக நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு 4 மணிக்கு வாரிசு படம் வெளியாவதால் அந்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரே தியேட்டரில் இரண்டு படங்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர்களுக்கு இடையே மோதலை தவிர்க்கும் விதத்தில் பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
காட்சி தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு மட்டுமே தியேட்டர் முன்பு கூட வேண்டும். பொறுமையுடன் அமைதியான முறையில் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.
பல மணி நேரத்திற்கு முன்பாகவே தியேட்டர் முன்பு நின்று ஆரவாரம் செய்வது ஒருவருக்கொருவர் தாழ்த்தி பேசி கோஷங்களை எழுப்ப தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து மாறுவேடத்தில் போலீசார் கண்காணிக்க உள்ளனர். அத்துமீறும் ரசிகர்கள் மீது போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






