search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students suspended"

    கோவையில் ராக்கிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கிங் கொடுமை தாங்காமல் சில மாணவர்கள் விபரீத முடிவு எடுத்தனர். எனவே ராக்கிங் கொடுமையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதன் மூலம் ராக்கிங் செய்வது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த 2-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல கோவை அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும் ராக்கிங் கொடுமை அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி இருந்து மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை, விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள் 4 பேர் ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். உடனே அவர்கள், டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ராக்கிங்கில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகனுக்கு ராக்கிங் கமிட்டி அறிவுறுத்தியது.

    இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் கல்லூரி துணை முதல்வர், ஆர்.டி.ஓ., மனநல மருத்துவர், விடுதி காப்பாளர் உள்பட 10 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி, தர்மபுரி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 4 பேர் தான் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவரை ராக்கிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்த அந்த மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இது குறித்து மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 750 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவ-மாணவி களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி உள்ளது.

    இங்கு சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் 10 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ராக்கிங் செய்வது சட்டப்படி குற்றம். அதையும் மீறி ராக்கிங் செய்தால் சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர கல்லூரி மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு ராக்கிங் தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் மீறி மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் நடந்து உள்ளது. இதில் 4 மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே ராக்கிங் செய்த மாணவர்கள் 4 பேரும் ஒரு ஆண்டுக்கு விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மாணவர் மட்டும் ஒரு மாதத்துக்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

    இங்குள்ள விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வார்கள் என்பதற்காக பிற மாணவர்கள் செல்ல முடியாத வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் 3-ம் ஆண்டு மாணவர்கள் 2-ம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்த அறிக்கை டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராக்கிங் நடக்காத வகையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×