search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "staff siege"

    திண்டுக்கல் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி பெற்றுத் தருவதாக ரூ.80 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
    திண்டுக்கல்:

    சத்தியமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனாக கருணாகரன் உள்ளார். திண்டுக்கல் குள்ளனம்பட்டி மற்றும் பொன்னகரம் பகுதியில் இயங்கி வந்த நிதி நிறுவனங்களுக்கு லோனா பிரிஜித் என்பவர் மேலாளராக உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனத்தில் பணிபுரிய 35 பேர்களை தேர்வு செய்தனர். திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்கு சேர்ந்த இவர்களிடம் தலா ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் டெபாசிட்டாக வாங்கப்பட்டது. முதல் 3 மாத பயிற்சி காலத்தில் ரூ.5500 சம்பளம் என்றும் அதன் பிறகு ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    6 மாதங்கள் கழித்து அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை மீண்டும் தந்து விடுவதாகவும் நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    3 மாத பயிற்சிக்கு பிறகு அவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தங்கள் நிதி நிறுவனம் மூலம் கடன் உதவி வழங்குவதாக உறுப்பினர்களை சேர்த்தனர். அவர்களிடம் இருந்து தலா ரூ.300 முதல் ரூ.1500 வரை பணம் வசூலிக்கப்பட்டு 600 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் பலருக்கு கடன் உதவி வழங்கப்படவில்லை. கடந்த 4 மாதங்களாக நிறுவனம் பூட்டியே கிடக்கிறது. சேர்மன் மற்றும் கிளை மேலாளரை தொடர்பு கொண்டாலும் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று நிதி நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், பல்வேறு கிராமங்களில் இருந்து 35 பேர் இங்கு டெபாசிட் தொகை செலுத்தி வேலையில் சேர்ந்தோம். அவர்கள் கூறியபடி சம்பளம் வழங்கவில்லை. ரூ.2 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். எங்களது டெபாசிட் தொகையை மனதில் வைத்து நாங்கள் தொடர்ந்து வேலை பார்த்து வந்தோம். நாங்கள் உறுப்பினர்களாக சேர்த்து விட்ட நபர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வசூல் செய்து கொடுத்துள்ளோம். தற்போது அவர்கள் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

    இந்நிறுவனம் எங்கள் டெபாசிட் தொகையையும் சேர்த்து ரூ.80 லட்சம் வரை மோசடி செய்துள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். எஸ்.பி. உத்தரவின் பேரில் நகர் வடக்கு போலீசார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கருணாகரன், திண்டுக்கல் காவேரிநகரைச் சேர்ந்த உறவினர் புவனேஸ்வரி, மேலாளர் லோனா பிரிஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்கள் தங்கள் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை ஆணை பெற்றுள்ளனர். எங்களிடம் பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்ந்து மிரட்டி வருவதால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நகர் வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
    ×