என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்வீட் ஸ்டால் அதிபர் கொலை"
- சந்தேகத்தின் அடிப்படையில் கொலையுண்ட சிவக்குமாரின் 2-வது மனைவி காளீஸ்வரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- பணத்தை திரும்ப வாங்குவதில் சிவக்குமாருக்கும், ஐயப்பனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே குருசாமிராஜா என்பவர் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அந்த கடையை குருசாமி ராஜா இறந்ததையடுத்து அவரது மகன் சிவக்குமார் (வயது 43) கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி தந்தையின் நினைவு நாளையொட்டி, ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கு பின்புறம் இ.எஸ்.ஐ. காலனி பகுதியில் உள்ள தனது தந்தையின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கு அஞ்சலி செலுத்த சிவக்குமார் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி (23), மகன் குருசரனுடன் (2) ஆகியோருடன் சென்றிருந்தார்.
அப்போது அங்கு 4 பேர் மது அருந்திக் கொண்டிந்தனர். அவர்களை இங்கு மது அருந்தக்கூடாது என சிவக்குமார் கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் அந்த 4 பேரும் சேர்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சிவக்குமாருக்கு முதல் திருமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்ற சிவக்குமார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஸ்வீட் கடைக்கு வேலைக்கு வந்த காளீஸ்வரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் கொலையுண்ட சிவக்குமாரின் 2-வது மனைவி காளீஸ்வரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. சிவக்குமாருக்கு சொந்தமான வீடு சுப்பாராஜா மடம் தெருவில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் யோகா மாஸ்டர் ஐயப்பன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அப்போது அவருக்கும், சிவக்குமாரின் மனைவி காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதேபோல் சிவக்குமாரிடமும் மிகவும் நட்பாக பழகிய ஐயப்பன் தொழில் தேவைக்காக ரூ.நான்கரை லட்சம் பணத்தை கொடுத்து இருந்தார். அந்த பணத்தை திரும்ப வாங்குவதில் சிவக்குமாருக்கும், ஐயப்பனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில்தான் சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே வெளியூரில் பதுங்கியிருந்த கொலையாளிகளான ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மருதுபாண்டி, விக்னேஸ்வரன் மற்றும் ஐயப்பனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






