என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா ரெயில் விபத்து"
- முதற்கட்ட விசாரணையில் ரெயில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
- ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரெயில் சேவை படிப்படியாக சீராகும் என தகவல்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில் ராயகடா பயணிகள் ரெயிலின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் செய்த தவறால் தான் ரெயில் விபத்தில் சிக்கியது என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
ஏழுபேர் கையொப்பமிட்ட முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் விபத்துக்குள்ளான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள், கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள், அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகள், தரவுகள் அடங்கிய அறிக்கை மற்றும் ஸ்பீடோமீட்டர் விவரம் உள்ளிட்டவை மிக கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ராயகடா பயணிகள் ரெயிலில் இருந்த ஓட்டுனர்கள் தவறான ஆட்டோ சிக்னல்களை வழங்கியதால் தான், இந்த ரெயிலின் பின்புறம் விசாகபட்டினம் பாலசா பயணிகள் ரெயில் மீது மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி ராயகடா பயணிகள் ரெயிலின் லோக்கோ பைலட் எஸ்.எம்.எஸ். ராவ் மற்றும் துணை லோக்கோ பைலட் ஆகியோர் தான் ரெயில் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
ரெயில்வே விதிகளின் படி ராயகடா ரெயில் இரண்டு நிமிடங்களுக்கு நின்று, பிறகு மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பி சென்றிருக்க வேண்டும். ரெயில் இவ்வாறு நிற்காமல் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
ராயகடா பயணிகள் ரெயில் விசாகபட்டினம் பாலசா ரெயிலின் மீது அக்டோபர் 29-ம் தேதி இரவு 7 மணி அளவில் மோதியது. இந்த விபத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் விழியநகரம் மாவட்டத்தில் அரங்கேறியது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.






