என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புகள் இல்லாமல் ஆபத்தான பயணம்"

    • போடி மெட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
    • மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு முக்கிய மலைச்சாலையாகும்.

    சுமார் 17 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ள இந்த போடி ெமட்டு மலைச் சாலையின் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுமார் 600 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் மலைச்சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

    தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் காய்கறி வாகனங்கள், பால்வண்டி, வாகனங்கள் மற்றும் தினசரி போக்குவரத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூப்பாறை, கஜானா பாறை, பி.எல்.ராவ், தோண்றி மலை போன்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கும், ஏலக்காய் தோட்டங்களுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிகளும் பயணம் செய்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும் சென்று வருகின்றது.

    இப்பகுதியில் முக்கிய வர்த்தக பயிரான ஏலக்காய் மூடைகள் கொண்டுவரும் வாகனங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் இப்பகுதியில் மிகப்பெரும் அளவில் பாறைகள் சரிந்து விழுந்து விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல நாட்கள் போராடி அந்த பாறைகள் அகற்றப்பட்டன.

    ஆனால் சுமார் 600 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் சேதமடைந்த தடுப்புச் சுவர் மீண்டும் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டதால் வாகனங்கள் மிகுந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    4-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் வாகனங்கள் கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பயணித்து வருகின்றன.

    மேலும் போடி மெட்டு மலைச்சாலையில் தடுப்புச் சுவர் தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி கிடப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருப்பதால் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த போடி மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைத்து உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×