என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்"

    • கலெக்டர் பூங்கொடி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு முதல் விற்பனை தொடக்கம்.
    • அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில், கதர் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் பூங்கொடி காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குத்துவிளக்கேற்றி தீபாவளி கதர் சிறப்பு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி முன்னிலை வகித்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது,

    நாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.35 லட்சம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நமது மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ.245 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், கதர் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    முன்னதாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குநர் முருகேசன் மற்றும் கதர் வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×