என் மலர்
நீங்கள் தேடியது "ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது"
- தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது
- கொடி, தோரணங்களால் விழாக்கோலம்
வேலூர்:
வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி வருகிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அவருக்கு கட்சியினர் மேள தாளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மேலும் முதல் - அமைச்சர் வரவேற்கும் விதமாக காட்பாடி முதல் வேலூர், பள்ளிகொண்டா வரை வழிநெடுகிலும் தி.மு.க. கொடி தோரணங்கள், கட்அவுட் மற்றும் பேனர்கள், மின் விளக்குகள் கண் கவரும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதால் வேலூரில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதல் - அமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார்.
இதற்காக கோட்டை வடிவிலான விழா மேடை, சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பந்தல், இருக்கைகள், குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
முதல் - அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பறக்கும் டிரேன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.






