என் மலர்
நீங்கள் தேடியது "ஜேடர்பாளையம் வன்முறை"
- டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.
- சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இந்த நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் மர்மநபர்கள் புகுந்து தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீவைத்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சூழலில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. மேலும் பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான சின்னமருதூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டிருந்த சுமார் 3200 பாக்கு மரங்கள் மர்மநபர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி (42) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.
இதே போல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜேடர்பாளையம் பகுதி முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






