என் மலர்
நீங்கள் தேடியது "மண் வளம் அதிகம் பாதிப்பு அடைகிறது"
- ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்
- குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.
மாவட்ட வன அலுவலர் கலாநிதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது:-
லத்தேரியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காய்கறிகள் வாரச்சந்தை நடக்கிறது. திறந்தவெளியில் காய்கறி கடைகள் இருப்பதால் வியாபாரிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதி அடைகின்றனர். எனவே வார சந்தை கடைகளுக்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும்.
உள்ளி ஊராட்சியில் பாலாற்றில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்.
சிவில் சப்ளை குடோனில் இருந்து குடியாத்தம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு சரிவர பொருட்கள் அனுப்புவதில்லை. இதனால் பாதி பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் தரமற்ற பொருட்கள் அனுப்புவதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். சீவூரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடுரோட்டில் நடந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
திப்பசமுத்திரம் கிராமத்தில் செல்லும் மலட்டாறில் அதிக அளவு மணல் கொள்ளை நடக்கிறது. மணல் அள்ளும் இடத்தில் மேடு, பள்ளம் அதிகமாக இருப்பதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது.
லத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சரிவர 3 பேஸ் மின் இணைப்பு வரவில்லை. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒய்யாத்தூர் ஏரியிலிருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகளில் மூலம் வண்டல் மண் அள்ளப்படுகிறது.
அவர்களிடத்தில் சென்று கேட்டால் அரசு பணிக்கு எடுப்பதாக கூறுகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் எப்படி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.
அதனை விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சூர் பாலாற்றில் கட்டப்பட்டு வரும் சிறிய தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
பேரணாம்பட்டு ஏரியில் தோல் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலக்கிறது. இதனால் மண் வளம் அதிகம் பாதிப்பு அடைகிறது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






