என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை"

    • நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.
    • இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும்.

    தேனி:

    தமிழக முதல்-அமைச்சர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

    ஆயுர்வேத மருத்துவம் மிக பழமையானது. நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வழிகாட்டும் ஒரு அருமையான சிகிச்சை முறை. ஒவ்வொரு மருத்துவ முறைகளிலும் உள்ள தனித்துவம், அந்தந்த முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும். ஆயுர்வேத முறையில் அதிக அளவில் மூலிகைச் செடிகளை வைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத் தோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில், இந்திய மருத்துவமுறைகளில் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படும். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை ரூ.6.75 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 50 படுக்கைகளுடன் 35,198 சதுர அடி பரப்பில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

    இம்மருத்துவமனை கட்டிடத்தில் சித்த மருத்துவம் மற்றும் மருத்துவப் பிரிவுகளின் வெளிநோயாளர் பிரிவு, மூலம் பவுத்திரம், கட்டிகள் போன்றவற்றிற்கு செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், பக்கவாதம் மறுவாழ்வு மையம், தெரபி மற்றும் தொக்கணம் அறை, மருந்தகம், அவசர சிகிச்சை அறை, ஆய்வறை, வர்ம சிகிச்சை, யோகா அக்குபஞ்சர் சிகிச்சை, மண் குளியல், சூரியக்குளியல், யோகா பயிற்சிக் கூடம், பெண்கள் இயற்கை மருத்துவ பிரிவு, கிரியா கூடம், உணவு விடுதி, கூட்டரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்பாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×