என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்காடு சுரேஷ் கொலை"

    • ரவுடி ஆற்காடு சுரேஷ் முன் பகையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • ரவுடி ஆற்காடு சுரேசின் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ் (42). நேற்று மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 38 வழக்குகள் உள்ளன.

    கொள்ளை, ஆள் கடத்தல், மாமூல் வசூலித்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் ஓர் இடத்தில் நிலையாக தங்குவது இல்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு புளியந்தோப்பில் சம்பத் என்பவரின் தந்தை ராதாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை எழும்பூர் 10-வது கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் நேற்று ஆற்காடு சுரேஷ் ஆஜரானார். பின்னர் அவர் தனது கூட்டாளி மாதவனுடன் காரில் பட்டினப்பாக்கத்திற்கு சென்றார். ஓட்டலில் சாப்பிடுவதற்காக நடந்து சென்றபோது ரவுடி ஆற்காடு சுரேசை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்து விட்டு காரில் தப்பி சென்றது.

    இதில் உடன் சென்ற மாதவனுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். மாதவன் படுகாயத்துடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரவுடி ஆற்காடு சுரேஷ் முன் பகையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புளியந்தோப்பில் 4 வருடத்துக்கு முன்பு சம்பத்தின் தந்தை ராதாவை ஆற்காடு சுரேஷ் கொன்றார். சின்னா என்பவனை கொலை செய்த ஆற்காடு சுரேசை ராதா தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தான். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக ஆற்காடு சுரேஷ் தீர்த்து கட்டப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தனது தந்தையை வெட்டி கொன்ற சுரேசை பழிவாங்க கூலியாட்களை சம்பத் அனுப்பினாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஆற்காடு சுரேஷ் கொலையில் 3 ரவுடிகள் நள்ளிரவில் போலீசில் சரண் அடைந்தனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சந்துரு, அரக்கோணத்தை சேர்ந்த ஜெயபால், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யமகா மணி ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர்.

    மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேசை தீர்த்து கட்டியது ஏன்? ரவுடிகளுக்குள் ஏதேனும் மோதல் ஏற்பட்டதா? என்று கொலைக்கான காரணம் குறித்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரவுடி ஆற்காடு சுரேசின் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அதன் பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ×