என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict:முளைப்பாரி விட்டு புனித நீராடினர் They left Mulipari and took holy bath"
- பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளான பரமத்திவேலூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதி, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம் பரிசல்துறை, ஆனங்கூர், அய்யம்பாளையம், பொன்மலர்பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவேரி கரையோரம் ஆடி 18 விழா நடைபெற்றது.
படையல்
இன்று காலை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் முளைப்பாரியை கொண்டு வந்து காவிரி ஆற்றில் குளித்து பின்னர் காவிரி கரையோரத்தில் மஞ்சள் பிள்ளையார், மணல் பிள்ளையார் போன்றவற்றை வைத்து தேங்காய், பழம் உடைத்து, மஞ்சள் கயிறு, பச்சரியில் சர்க்கரை கலந்த படையலை சாமிக்கு வைத்து வழிபட்டனர்.
இந்த பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மஞ்சள் கயிறை பெரியவர்களும், குழந்தைகளும் கையில் கட்டிக் கொண்டனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காவிரி ஆற்றங்கரை மணல் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை சாப்பிட்டு அங்கு ஓய்வெடுத்து சென்றனர்.
முளைப்பாரி
அதேபோல் ஆனங்கூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் பகுதிக்கு ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், கழுவங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்.
பின்னர் தங்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர்.
பரமத்திவேலூர் காவிரி
வேலூர் காவிரி ஆற்றில் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
முளைப்பாரியை ஆற்றில் விட்டும், புதுமணத் தம்பதிகள் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
மதியம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது.
இதேபோல் இங்கு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி மற்றும் பரிசல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதனை காண சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.
அனுமதி
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், பூஜைகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இதனால் பக்தர்களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் பூஜை கள் நடத்தவும், பரிசல் போட்டி நடத்தவும் மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
படகு போட்டி
இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் பரமத்திவேலுார் காவிரியாற்றில் படகு போட்டியும், அதனை தொடர்ந்து மாலை 6 ஆறு மணிக்கு மேல் ஈஸ்வரன் கோவிலில் இருந்து மோட்ச தீபம் கொண்டு வந்து படகில் எடுத்துச் சென்று காவிரியின் நடு ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதனிடையே பாதுகாப்பு கருதி காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பள்ளிபாளையம்
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் காவிரியில் நீராடிய பின்னர் பூஜைகள் செய்து வழிபட்டனர். இங்கு வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பள்ளிபா ளையம் வசந்த நகரில் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.






