என் மலர்
நீங்கள் தேடியது "கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்"
- சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.
- இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்கு சுமார் 5 சதுர கி.மீ. பரப்பில் மீனாட்சி அம்மன் கண்மாய் அமைந்துள்ளது.
மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள சுமார் 5000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும் இக்குளத்தில் உற்பத்தியாகும் மீன்களை உண்பதற்காக கொக்கு,நாரை, வாத்து, நீர்க்காகம், மீன் கொத்தி பறவை, கரண்டிமூக்கன் பெலிக்கண் போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் ஆயிரக்கணக்கில் இப்பகுதியை சுற்றி வாழ்ந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை நீர் இந்த கண்மாய்க்கு கால்வாய்கள் மூலம் வந்தடைகிறது.
அம்மாபட்டி ஊராட்சிக்கு சொந்தமான இந்த கண்மாயில் தற்போது மீன்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை, கண்ணாடி கெண்டை, உழுவை, குரவை, கெழுத்தி, நாட்டு ரக மீன்கள் உற்பத்தி இனப்பெருக்கம் செய்யப்பட்டு தினமும் சுமார் 500 கிலோ முதல் 750 கிலோ வரை வெளியூர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது போதிய மழையின்மை காரணமாக கண்மாய் க்கு வரும் நீர்வரத்து நின்று விட்டதால் கண்மாயில் நீர் வற்றி குறைந்து காணப்படுகிறது.
தற்போது சில நாட்களாக இந்த கண்மாயில் தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளது. இதனால் கண்மாயை சுற்றிலும் மீன்கள் செத்து மடிந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதால் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தினால் கண் மாய்க்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் மேல சொக்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சாக்கடைக் கழிவு நீர் கண்மாய்க்குள் கலப்பதாலும் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்டு நீர் மாசடைந்துள்ளது. இதனால் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவதால் மீன்கள் செத்து மடிவதாக இப்பகுதி மக்கள் கூறினர்.
தினமும் இதுபோன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடான கண்மாயாக மாறி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.






