என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழ்நமண்டி அகழாய்வு"

    • 2500 ஆண்டுகளுக்கு முந்தையது
    • 3 அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ்நமண்டியில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கியது. அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதுவரை 11 கல்வட்டங்களை குழிதோண்டி அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 11 கல்வட்டங்களிலும் தலா ஒன்று முதல் 3 ஈமப் பேழைகளும், சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஈமப் பேழைகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    சுடுமண்ணால் 12 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஈமப் பேழைகள் தலா சுமார் 3 அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன.

    இதில் சில ஈமப் பேழைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஈமப் பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பின்னர்தான் இதில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரம் தெரியவரும்.

    மேலும் இந்த அகழாய்வின் போது கிடைத்த பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×