என் மலர்
நீங்கள் தேடியது "காவல் காக்கும் விவசாயிகள்"
- தக்காளியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது.
- நோய்த் தாக்கத்தால், 70 சதவீதம் தக்காளி தோட்டங்கள் அழிந்துவிட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தக்காளிக்கு ஆண்டு முழுவதும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளில் தேவை அதிகம் இருப்பதால், ஓசூர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.தக்காளியைப் பொறுத்தவரை சந்தைக்கு வரத்தைப் பொறுத்தே விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும். இதனால், ஆண்டு முழுவதும் நிலையான விலை கிடைப்பதில்லை. குறிப்பாக மகசூல் பாதிக்கப்படும்போது விலை அதிகரிக்கும்.
தற்போது, தக்காளி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் தக்காளியின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது.
இதனால், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் தக்காளி பயன்பாடு பெரும் அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில் தக்காளியின் விலை உயர்வால், தோட்டங்களில் மர்ம நபர்கள் தக்காளியைப் பறித்து செல்லும் நிகழ்வுகள் ஓசூர் பகுதியில் அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகள் தோட்டங்களில் இரவு பகலாகக் கண்விழித்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில் ஓசூர் பகுதியில் நோய்த் தாக்கத்தால், 70 சதவீதம் தக்காளி தோட்டங்கள் அழிந்துவிட்டன. இதனால், கடந்த சில வாரங்களாகத் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
தக்காளி தோட்டங்களில் மர்ம நபர்கள் இரவில் தக்காளியைப் பறித்துச் செல்வது அதிகரித்துள்ளது. ஒரு தோட்டத்தில் 5 கிலோ தக்காளியை பறித்தால் கூட விவசாயிகளுக்கு ரூ.500 இழப்பு ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் தோட்டங்களில் இரவு பகலாக கண் விழித்துக் காவல் காத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






