என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பி விபத்து"

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
    • மின்வாரிய ஊழியர்கள் ஒயரை சரி செய்தனர்

    வேலூர்:

    காட்பாடி ஜே.ஜே.நகரில் மின் வயரில் சப்ளை குறைவாக வருவதால், 3 பேஸ் லைனாக மாற்றித் தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, 3 பேஸ் லைனாக மின்கம்பிகள் மாற்றியமைக்கப்பட்டது.

    இவ்வாறு அமைக்கப்பட்ட மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், காற்று அடிக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று உரசி மின்வயர் அறுந்து விழுந்து விடுகிறது.

    தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்யக்கோரி அந்த பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லையாம். இந்த நிலையில் இன்று மதியம் காட்பாடி செங்குட்டை பகுதியில் பலத்த காற்று வீசியது.

    அப்போது ஜே.ஜே. நகர் பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியது. மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்ட இடத்தில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பிகள் திடீரென அறுந்து கீழே விழுந்தது.

    மின்சாரம் பாய்ந்தபடி அறுந்து தொங்கிய மின்ஒயரால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் அந்த பகுதி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து தொங்கிய மின் ஒயரை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை அதிகாரிகள் சரி செய்யாமல் கவனக்குறைவுடன் செயல்படுகின்றனர். இதேபோன்று ஏற்கனவே 3 முறை மின் வயர் அறுந்து விழுந்துள்ளது.

    பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பொதுமக்கள் அதிகம் நடமாடுவதால் மிகவும் அச்சமாக உள்ளது. இன்று மின் ஒயரை சரி செய்த பிறகும் கூட வழக்கம் போல் தாழ்வாகவே செல்கிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன்பு தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×