என் மலர்
நீங்கள் தேடியது "சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்"
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் கொணவட்டம், வசந்தம் நகரில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வசந்தம் நகரில் உள்ள 6 தெருக்களில் தார் சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தெருக்களில் இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை.
எனவே கழிவுநீர் கால்வாய் கட்டிய பிறகே, தார் சாலை போட வேண்டுமென அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று 6 தெருக்களிலும் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் திரண்டு சென்று, தார் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கருகம்புத்தூர் சர்வீஸ் சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பிறகே தார் சாலை போடப்படும்.
பொதுமக்கள் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.






