என் மலர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் தவிப்பு"
- வெப்பாலம்பட்டி பகுதியில் 80-ற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மயானத்திற்கு இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி காலனி பகுதியில் 80-ற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கென தனியே மயானம் ஒதுக்கப்படாத நிலையில், காட்டாகரம்- சுண்டகாபட்டி ஏரி கால்வாய் அருகே சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும்போதும் பிரச்சனை ஏற்படுவதும், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் உயிரிழந்தை நிலையில், அடக்கம் செய்ய இடம் இல்லாததால் போராட்டத்திற்கு கிராம மக்கள் தயாரான நிலையில் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி நேரில் சென்று, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தற்போது ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய அறிவுறுத்தி, விரைவில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.
இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், வெப்பாலம்பட்டி கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்கு பாதை கிடையாது. சுடுகாட்டில் புதைக்க இடம் கிடையாது. இருக்கின்ற குறைந்தபட்ச இடத்தில் அனைத்து உடல்களையும் அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டு கேட்டு போராடி வருகிறோம். காட்டாகரம்- சுண்டகாபட்டி ஏரி கால்வாய் அருகே 7 ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. அவற்றில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இது குறித்து வெப்பாலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் கேட்டபோது, ஓடை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய உத்திரவு கொடுக்கப்பட்டுள்ளது. அளந்த காட்டிய பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.






