என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை போடி ரெயில்"
- சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனியில் முதன் முதலாக 1909ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ரெயில் சேவை 2வது உலகப்போர் காரணமாக ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டவாளங்கள் அகற்றப்பட்டது.
பின்னர் 1954 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பயணிகள் மற்றும் பொருள்கள் ஏற்றிச்செல்லும் பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
போடி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் எல்லைப் பகுதிகளில் விளையும் ஏலக்காய், இலவம்பஞ்சு, மிளகு, காப்பி, மாங்காய் போன்றவைகள் போடியில் இருந்து மதுரை வரை ரெயிலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீட்டர்கேஜ் இருப்பு பாதை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் இருப்புப் பாதைக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.
சுமார் ரூ.474 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரையில் இருந்து போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள், மற்றும் ரெயில் என்ஜின், பயணியர் பெட்டியுடன் ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து தொடங்குவதற்கான அனுமதியும் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
தற்போது மதுரையில் இருந்து தேனி வரை வந்து செல்லும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து போடி வரை நீட்டிக்கப்படுவதற்கு பலமுறை திட்டமிடப்பட்டு எதிர்பாராத சூழல் காரணமாக ரெயில் போக்குவரத்து தொடங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் தற்போது வருகின்ற 15-ந் தேதி முதல் மதுரையில் இருந்து போடி வரையிலும், போடி-மதுரை வரையிலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில்கள் இயக்கப்படுவதற்கான தொடக்க விழா நடைபெறும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
15-ந் தேதி இரவு இந்த சேவையை போடி ரெயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தொடங்கி வைக்கிறார். 16-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களும், போடி இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களில் மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக வந்து செல்லும் சிறப்பு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.
மத்திய இணை அமைச்சர் முருகன் போடியில் இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பின்பு போடிக்கு மதுரை மற்றும் சென்னையில் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்குவதால் பொதுமக்கள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ரெயில் போக்குவரத்து சென்னை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் போடியில் இருந்து ஏற்றுமதியாகும் ஏலக்காய், மாம்பழம், காப்பி, மிளகு, இலவம்பஞ்சு, போன்றவைகளின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி செலவு குறையும் என்றும் சென்னையில் இருந்து வந்து செல்லும் ரெயில்கள் கரூர் சேலம் ஈரோடு வழியாக வருவதால் ஆடை வகைகள் மஞ்சள் மற்றும் உற்பத்தி பொருள்கள் இறக்குமதி அதிகரித்து இறக்குமதி செலவு குறையும் என்று தெரிவித்துள்ளனர்.






