என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ ஊன்றீசுவரர்"

    • திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு வருந்தி 'நீ கோவிலில் உளாயோ?' என மிகவும் மனம் நொந்து வினவினார்.
    • 'பூண்டி' என்னுமிடத்தில் அணைக்கட்ட திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அணை கட்டும் பணியும் கடந்த 1942-ம் ஆண்டு செயல்பட்டது.

    சைவ சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவொற்றியூரில் 'சங்கிலி நாச்சியார்' என்னும் மங்கையை மணக்க திருவொற்றியூர் இறைவன் திருமுன்பு செய்த பிரதிக்கஞை தவறி திருவொற்றியூரினின்றும் திருவாரூருக்குப் புறப்பட்ட பொழுது கண்பார்வை மறைந்து போயிற்று. அங்கிருந்து மிகுந்த சிரமத்துடன் 'வடதிருமுல்லைவாயில்' இறைவனை வழிபட்டு திருவெண்பாக்கத்தை நோக்கி வரும் போது உமையம்மை மின்னல் போன்ற ஒளியமைத்து வழிகாட்டி மறைந்தாளாம். ஸ்ரீதடிக் கௌரி அம்பிகா அம்மைக்கு இதனால் மின்னொளியம்மை என்ற பெயரும் உண்டு.

    திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு வருந்தி 'நீ கோவிலில் உளாயோ?' என மிகவும் மனம் நொந்து வினவினார். அதற்கு இறைவன் 'உளோம் போகீர்'(இருக்கிறேன் போய் வாருங்கள்) என அயலார் போலக்கூறி கண்ணொளி மறைந்த சுந்தரருக்கு ஊன்று கோல் ஒன்றை வீசியருளினார். இதனால் இங்குள்ள ஸ்ரீ ஆதார தண்டேஸ்வர சுவாமிக்கு ஊன்றீஸ்வரர் எனப்பெயர் அமைந்தது.

    கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன் கண்ணை அளிக்காமல் ஊன்று கோலை அளித்ததால், வன்றொண்டர் கோபித்துக் கொண்டு அக்கோலை வீசியெறிய, அது இறைவனின் திருமுன்பு படுத்திருக்கும் நந்தியெம்பெருமானின் கொம்பில் பட்டதாம். இதனால் கொம்பு ஒடிந்தது போல நந்தி இன்றும் ஒற்றைக்கொம்புடனே காணப்படுகிறார். பின்னர் இத்தலத்தை விட்டுச்சென்ற சுந்தரர் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரநாதரை பாடிப்பரவி இடக்கண்ணும், திருவாரூர் தியாகேசனைப்பாடி போற்றிப் பின்னர் பல தலங்களை விழிபட்டு வெள்ளை யானையில் 'கயிலை' போய் சேர்ந்தார் என்பது வரலாறு.

    சென்னை நகருக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை நீக்க குசத்தலை ஆற்றில் 'பூண்டி' என்னுமிடத்தில் அணைக்கட்ட திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அணை கட்டும் பணியும் கடந்த 1942-ம் ஆண்டு செயல்பட்டது. அப்போது திருவிளம்புதூர் உட்பட பல ஊர்களை குடிபெயர்க்க அரசாங்கம் உத்தரவிட்டது. திருவெண்பாக்கம் என்னும் திருவளம்புதூர் ஊரில் நடுவில் இருந்த சிதிலமடைந்த சுமார் 1350 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊன்றீஸ்வரர் ஆலயத்தையும் பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் தொண்டுள்ளம் கொண்ட அருட்செல்வர் திரு. ஏ.என். பரசுராம் எம்.ஏ. அவர்கள் பெரு முயற்சி எடுத்து திருப்பணிக்குழுவை அமைத்துக்கொண்டு பூண்டி ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்த திருக்கோவில் மூலவர் அம்மன் மற்றும் இதர மூர்த்தங்களையும் பிரகாரத்தில் இருந்த பழைய கல்வெட்டுக்கள் அனைத்தையும் பின்னமின்றி பெயர்தெடுத்து பூண்டியின் மேடான இடத்தில் பழமை மாறாமல் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் திருக்கோவில் அமைத்து 5.7.1968 ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்வித்தார்கள்.

    அதன் பிறகு பூஜைகள், திருவிழாக்கள் போன்றவை சிறப்புற நடைபெறவும், பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்ததிகளுக்கு சம்பளம் அளிக்கவும் ஏதுவாக திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலின் உபகோவிலாக இணைக்கப்பட்டது. இதன் பிறகு 7.7.2000 அன்று திருக்குடமுழுக்கும் செய்விக்கப்பட்டது.

    குறிப்பு:-

    மேற்படி திருக்கோவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் உள்ளது.

    ×