என் மலர்
நீங்கள் தேடியது "10 ஆயிரம் ரொக்கம்"
- உறவினர் வீடு என்று கூறியதால் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி கிராமம், கிழக்குமேடு பகுதி சேர்ந்தவர் தானம்மாள் (வயது 60), தொழிலாளி.
இவர் தனது மகன் ராமு (40), மருமகள் தர்ஷினி (33) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், தானம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
அதன்படி நேற்று தானம்மாள் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு, வீட்டின் அருகில் உள்ள மர நிழலில் உட்கார்ந்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் வேகமாக வந்து வீட்டின் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டிருந்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தானம்மாள், மருமகள் தர்ஷினி மர்ம நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தர்ஷினி மர்ம நபரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அப்போது அந்த நபர் இது என்னுடைய பெரியம்மா வீடு தான். நான் அடிக்கடி இங்கு வருவேன் என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த தர்ஷினி, மாமியார் தானம்மாவை அழைத்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட நபர் திருடிய நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அங்கு 100 நாள் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த சொக்கன்வட்டம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (22) என்பதும், அவர் தானம்மாள் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர் ஓட்டி வந்த பைக்கும் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பதியை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை மீட்டு தானம்மாளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் திருப்பதியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






