என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் தடகள போட்டி"

    • 3 நாட்கள் நடைபெறுகிறது
    • போட்டிகளில் அதிக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட விளையாட்டு சங்கம் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 21-வது அருணை மருத்துவக்கல்லூரி தேசிய பெடரேஷன் கோப்பைக்கான ஜூனியர் தடகள போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    தேசிய ஜூனியர் தடகள போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான விளையாட்டு ஆடையை அறிமுகம் செய்த பின் டாக்டர் கம்பன் கூறியதாவது:-

    திருவண்ணாமலையில் இன்று தொடங்கும் 21-வது தேசிய ஜூனியர் தடகள போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தடகள போட்டிகள் காலை 6 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரையிலும், மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையில் நடைபெறும். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மாவட்ட தடகள சங்கம் சார்பில் பொற்கிழி வழங்கப்படும்.

    தொடக்க விழா

    இன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொள்கிறார். 30 -ந் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொள்கிறார்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளையாட்டு துறைக்கு ஏராளமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.

    குறிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

    தடகள வீரர்கள் மலை பிரதேசத்தில் பயிற்சி பெற்று கடல் மட்ட அளவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் போட்டிகளில் அதிக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும்.

    மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் தடகள வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை அமைத்து தர வேண்டும் என தடகள சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.

    ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை பதக்கம் வெல்ல வைப்பதே தடகள சங்கத்தின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகள சங்க மாநில செயலாளர் லதா, மாவட்ட செயலாளர் புகழேந்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×