என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவுத்துறை விசாரணை"

    • ராமேசுவரத்தை சேர்ந்த அரசபாண்டி என்ற மீனவர் 13 கி.மீ. தொலைவில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
    • இந்திய கடற்படை நடவடிக்கையை கண்காணிக்க பறக்கவிடப்பட்ட புறாவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் தென் எல்லையான ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் எல்லையை காத்து வருகின்றனர். அண்மை காலமாக இலங்கையில் இருந்து இந்தியாவின் நடவடிக்கையை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    இதற்காக இலங்கையில் உள்ள துறைமுகத்தை சீனா பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் அதிநவீன போர் கப்பல் யுவான், இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவை உளவு பார்க்க தான் என புகார் எழுந்தது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தை சேர்ந்த அரசபாண்டி என்ற மீனவர் 13 கி.மீ. தொலைவில் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது படகில் ஒரு புறா தஞ்சமடைந்தது.

    புறாவை மீட்ட மீனவர் அரசபாண்டி, அதனை ராமேசுவரத்தை சேர்ந்த புறா வளர்க்கும் ரகுவிடம் கொடுத்தார். புறாவின் கால்களில் சுதன், இலங்கை யாழ்ப்பாணம் என்றும், ஒரு தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்தது.

    அந்த புறா ஹேமர் இனத்தை சேர்ந்த பந்தய புறா என்பதும், அது வானில் 300 கிலோமீட்டர் வரை பறக்கக்கூடியது என்றும் தெரியவந்தது. ஆகவே இலங்கையில் இருந்து பந்தயத்திற்காக பறக்க விடப்பட்ட புறா இங்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அதேவேளையில் இந்திய கடற்படை நடவடிக்கையை கண்காணிக்க பறக்கவிடப்பட்ட புறாவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ×